இந்தியாவில் பெரும் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதி – குவியும் பாராட்டு
ஆபத்திலிருந்து காப்பாற்ற வயது தடையில்லை என்று நிரூபித்துள்ளனர் தென்காசியை சேர்ந்த முதிய தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
ஆபத்தான தருணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சமயோஜிதமாக செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்த முதிய தம்பதிக்கு நேரிலும், ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 12.50 மணி அளவில் தமிழக – கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை அருகே புளியரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தடுப்பு கம்பிகளை தாண்டி 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
பகவதிபுரம் மற்றும் ஆரியங்காவு ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள தண்டவாளத்தில் லாரி குப்புற கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான பெரும் சப்தத்தைக் கேட்ட அப்பகுதியில் வசிக்கும் வயதான தம்பதியான சண்முகையாவும் அவர் மனைவியும் சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினர்.
அங்கே தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியைப் பார்த்த தம்பதியர் கண்களில் அதே வழியில் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இதனால் பேரதிர்ச்சி அடைந்தனர். காரணம் தண்டவாளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரி மீது வேகமாக வரும் ரயில் மோதினால் பெரும் விபத்து ஏற்பட்டு பலர் பலியாவார்கள் என்பதே.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைமையைப் புரிந்து கொண்ட அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் தங்களது கையில் இருந்த டார்ச் லைட்டை ரயில் வரும் திசையை நோக்கி அடித்துக்கொண்டே தண்டவாளத்தில் இறங்கி ஓட ஆரம்பித்தனர்.
தண்டவாளத்தில் பளீரென்ற வெளிச்சத்தை பார்த்து ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் டிரைவர் உடனே புனலூரை நோக்கி செல்லும் காலி தண்டவாளத்தில் ரயிலை செலுத்தினார். நள்ளிரவு 1.15 மணியளவில் ரயில் நிறுத்தப்பட்டு, அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தள்ளாத வயதிலும், தளாராத மன தைரியத்தோடு போராடி, கடைசி நிமிடத்தில் பெரும் விபத்தை தடுத்து நிறுத்தியுள்ள இந்த வயதான தம்பதியின் செயலைப் பாராட்டி 5 இலட்சம் ரூபாயை வெகுமதியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர்.