பிலிப்பைன்ஸில் இயங்கிய சிறுவர் துஷ்பிரயோக கும்பல் முறியடிப்பு: 92 குழந்தைகளை மீட்டது ஆஸ்திரேலிய பொலிஸ்
பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்டு இயங்கிய பாரிய சர்வதேச சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்பை ஆஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் முறியடித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட 35 அதிரடி சோதனைகளின் மூலம், 6 வயதிற்குட்பட்ட 92 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட 13 ஆஸ்திரேலியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பிலிப்பைன்ஸில் 18 தரகர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேர மண்டல ஒற்றுமை மற்றும் ஆங்கில மொழிப் பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக பணம் செலுத்தி இத்தகைய துஷ்பிரயோக காணொளிகளை ஆஸ்திரேலியக் குற்றவாளிகள் பெற்று வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே நடந்தாலும், இணையவழித் தடயங்கள் மூலம் குற்றவாளிகள் எங்கு ஒளிந்திருந்தாலும் தப்பிக்க முடியாது என ஆஸ்திரேலிய பொலிஸ் கமாண்டர் ஹெலன் ஷ்னைடர் எச்சரித்துள்ளார்.





