ஒடிசாவில் இறுதிச்சடங்கின் போது திடீரென உயிர்த்தெழுந்த 86 வயது மூதாட்டி

ஒடிசாவில் புனித யாத்திரை நகரமான பூரியில் உள்ள ஒரு தகன மேடையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 86 வயது மூதாட்டி உயிர்த்தெழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பி. லட்சுமி என்ற அந்தப் பெண், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போலசரா பகுதியில் உள்ள தனது மருமகனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது இறந்துவிட்டதாகக் கருதப்பட்டதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அவர் கண்களைத் திறக்கவில்லை, மூச்சு விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து, அப்பகுதியில் உள்ள மற்றவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். வீட்டிலிருந்து பூரியில் உள்ள ஸ்வர்கத்வார் தகன மேடைக்கு உடலை தகனத்திற்காக எடுத்துச் செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தோம்,” என்று குடும்ப உறுப்பினர் தர்மா சேதி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அவரது தகனத்திற்கான சம்பிரதாயங்களை குடும்பத்தினர் செய்து கொண்டிருந்த போது, ஸ்வர்கத்வாரில் உள்ள பாதுகாப்புக் காவலர் மற்றும் பிற ஊழியர்களால் மூதாட்டி உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது மூதாட்டி லட்சுமி ஒடிசாவில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.