ஆஸ்திரியாவில் பசு தாக்குதலுக்கு இலக்காகி 85 வயது மலையேற்ற வீரர் உயிரிழப்பு

ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மலையேறி ஒருவரை பசுக்கள் மிதித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
ஒன்பது மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்த ஐரோப்பிய நாட்டில் பசுக்கள் தாக்கி மனிதர்கள் இறப்பது அரிதினும் அரிது.
அந்நாட்டு மலைப்பகுதிகள் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கின்றன. அங்கு பசுக்கள் மந்தை மந்தைகளாகச் சுற்றித் திரிவது வழக்கம்.
இந்நிலையில், 85 வயது நபரும் அவருடைய 82 வயது மனைவியும் தங்களது செல்ல நாயுடன் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி ஆஸ்திரியாவின் ஸ்டைரியா மாநிலத்திலுள்ள ஒரு மலைப்பகுதிக்குச் சென்றனர்.
“வியன்னாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இணையர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மூன்று கன்றுகளும் ஆறு பசுக்களும் அவர்களைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தின,” என்று உள்ளூர்க் காவல்துறைப் பேச்சாளர் மார்க்கஸ் லேம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து, சால்ஸ்பர்க்கிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அந்த நபருக்கு அவசர அறுவை சிகிச்சை செல்லத் திட்டமிடப்பட்ட நிலையில், அதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக அவர் இறந்துவிட்டார்.
இதேபோல, 2024ஆம் ஆண்டிலும் பெண் ஒருவர் பசுத் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார்.