75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம்! விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை
சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான தகவல்களை வெளியிடத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட போதிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை எனவும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விமல் வீரவாஞ்சவுக்கு அழைப்பாணையும் பிறப்பித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த விமல் வீரவங்ச, சுமார் 75 மில்லியன் .ரூபாய் பெறுமதியான சொத்து மற்றும் பணத்தை கையகப்படுத்தியமை தொடர்பான தகவல்களை வெளியிடத் தவறியமைக்காக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.