இலங்கை சுகாதார சேவையில் 700 தாதியர்கள் – புதிய சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!
 
																																		இலங்கை மக்களுக்கு மிகச் சிறப்பாக சுகாதார சேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக துறைசார் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
திசைமுகப்படுத்தல் பயிற்சி நெறிக்காக விஞ்ஞானமானி தாதியர் பட்டதாரிகள் 700 பேரை இணைத்துக் கொள்வது தொடர்பான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தாதியர் சேவையில் கணிசமான வெற்றிடங்கள் உள்ளன. வெற்றிடங்களை நிரப்புவதற்குத் துரிதமாக நியமனங்கள் வழங்கப்படும். சுகாதார துறைசார்ந்தோரின் அர்ப்பணிப்பு காரணமாக உலகின் சிறந்த சுகாதார சேவையாக உள்ளூர் சுகாதார சேவை பாராட்டைப் பெற்றுள்ளது. சுகாதார சேவையில் நவீன தொழில்நுட்பத்தைச் சேர்த்து சகல பிரஜைகளுக்கும் இ-ஹெல்த் (e-Health) சேவையை வழங்கப் போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று நியமனக் கடிதங்களைப் பெற்ற விண்ணப்பதாரிகள் நியமனக் கடிதத்தின் பிரகாரம் தமக்குரிய தாதியர் பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும் ஆறாம் திகதி தம்மைப் பதிவு செய்து கொள்வது அவசியம்.
அதன் பின்னர் அவர்கள் நாடு பூராகவுள்ள 31 வைத்தியசாலைகளில் செயன்முறைப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பயிற்சியைச் சிறப்பாகப் பூர்த்தி செய்த பின்னர் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் தாதியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும்.
இன்றைய நிகழ்வில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்முடனோ சுகாதார அமைச்சுடனோ பேச முடியும் எனத் தெரிவித்தார்.
 
        



 
                         
                            
