சிங்கப்பூரில் அதிகரிக்கும் நாடற்ற பிள்ளைகள் – குடியுரிமை கிடையாது – அமைச்சர் சண்முகம் அறிவிப்பு
சிங்கப்பூரில் 12 வயதிற்கு குறைந்த 7 பேரும் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 13 பேரும் நாடற்றவர்களாக இருந்தனர்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இங்கு நாடற்றவர்களாக இருந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் அவர்கள் 2.3 சதவீதம் அங்கம் வகித்தனர். அவரவர் சூழ்நிலை வேறுபட்டிருந்தாலும், அவர்களின் நாடற்ற நிலைக்கு ஒரு காரணம், தங்கள் பிள்ளைகளுக்காக தங்கள் நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுத் தராத வெளிநாட்டுப் பெற்றோருக்கு சிங்கப்பூரில் பிறந்ததாகும்.
நாடற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை குறித்தும் அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் ஆதரவு பற்றியும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ரஸ்வானா பேகம் அப்துல் ரஹிமின் கேள்விகளுக்கு உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
நாடற்ற ஒருவர், எந்தவொரு நாட்டுக் குடிமகனாகவோ அங்கீகரிக்கப்படுவதில்லை, அவரிடம் நாட்டுரிமையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் வசிக்கும் நாடற்றவர்கள் குறித்து செப்டம்பரில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து, இணைப் பேராசிரியர் ரஸ்வானாவின் கேள்விகள் வந்துள்ளன.
2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி, சிங்கப்பூரில் வசிக்கும் 853 நாடற்றவர்களில் ரிக்கோ ரஃபிஸுவானும் ஒருவராகும். சிங்கப்பூரில் பிறந்த அவர், நாட்டைவிட்டு வெளியேறவோ பாடசாலைக்கு செல்லவோ இல்லை. நிரந்தரவாசியும் இல்லாத அவர், மானியத்துடன் கூடிய கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு வசதிகளைப் பெற உரிமை கிடையாது.
பேராசிரியர் ரஸ்வானாவுக்கு அமைச்சர் சண்முகம் அளித்த எழுத்துபூர்வ பதிலில், மற்ற நாடுகளைப் போலவே, இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே சிங்கப்பூர் குடியுரிமை கிடைத்துவிடாது என்றார்.
சிங்கப்பூர் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் பலதரப்பட்ட தகுதிக்கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விண்ணப்பதாரரின் நடத்தை, அவரின் பங்களிப்பு, சிங்கப்பூர் உடனான தொடர்பு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
அவர் எந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் நாடற்றவரானார் என்பது பற்றியும் கருத்தில் கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.
தங்கள் பிள்ளைகளுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவது உட்பட அவர்களின் நலனைக் கவனித்துக்கொள்வது அவர்களின் பெற்றோர் அல்லது சட்டபூர்வக் காப்பாளர்களின் பொறுப்பாகும். எனினும், ஒரு சிறுவர் அல்லது இளம் நபருக்குப் பெற்றோர் அல்லது பராமரிப்பாளரால் சிங்கப்பூரில் பராமரிப்பு அல்லது பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் சிறுவர், இளம் நபர்கள் சட்டத்தின்கீழ் அவர்களுக்குச் சட்டபூர்வப் பாதுகாப்பு வழங்கப்படலாம், என்று அமைச்சர் சண்முகம் விவரித்தார்.