காஸாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் உயிரிழப்பு

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளதாகவும் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
மருத்துவமனைகள் [குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள்] மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
காஸாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.
மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியை பெற முடியவில்லை அவ்வமைப்பு தெரிவிக்கிறது.