உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 54 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டுள்ளது.
31 மாணவர்களுக்கு நோய் நிலைமை பதிவான நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 53 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் அனைவரும் கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர்களில் 31 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பொலிஸ்நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனைகளுக்காக மாணவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் காரணமாக பாடசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் பிரவேசத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.