மனதை அமைதிப்படுத்த உதவும் 5 இலவச செயலி

வேலைப்பளு, மன அழுத்தம், அதிக சிந்தனை என பல காரணங்களால் மன அமைதி குறைந்து தவிப்பவர்களுக்கு, நல்ல நண்பரின் ஆறுதலோ அல்லது ஒரு மனநல ஆலோசகரின் உதவியோ மிகவும் அவசியமானது. ஆனால், அது எப்போதும் சாத்தியமில்லை. இதுபோன்ற சமயங்களில், சில இலவச மொபைல் செயலிகள் உங்களுக்கு பேருதவியாக இருக்கும். உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், எண்ணங்களைச் சீரமைக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் உதவும் 5 இலவச மொபைல் ஆஃப்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. PI Bot:
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் நட்புணர்வு மிக்க சாட்பாட். இது அனுபவம் வாய்ந்த, உங்களை எடைபோடாத நண்பரைப் போலச் செயல்பட்டு, பதற்றமான தருணங்களில் உங்களுடன் பேசுகிறது. நீங்கள் வேலை நெருக்கடியில் இருக்கும்போதோ அல்லது மனது குழப்பமாக இருக்கும்போதோ, இதனுடன் பேசி உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம். இது எந்தவொரு மருத்துவ ஆலோசனையையும் வழங்குவதில்லை என்றாலும், உங்களின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டு, நிதானமாகப் பதிலளித்து மன அமைதிக்கு உதவுகிறது. இது 24 மணி நேரமும் இலவசமாக கிடைக்கிறது.
2. Insight Timer:
இந்த செயலியில் ஏராளமான தியான வழிகாட்டல் தொகுப்புகள், அமைதியான இசை, மூச்சுப் பயிற்சிகள் மற்றும் உலகளாவிய மனநல வல்லுநர்களின் உரைகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
உங்களுக்கு சில நிமிடங்கள் ஓய்வு தேவைப்பட்டாலும் சரி அல்லது ஆழ்ந்த தியானம் செய்ய விரும்பினாலும் சரி, இந்த செயலி பெரிதும் உதவும். குறிப்பாக, படுக்கைக்குச் செல்லும் முன் மனதை அமைதிப்படுத்தவும், அதிகப்படியான சிந்தனைகளைக் குறைக்கவும் இது ஒரு சிறந்த வழி.
3. Wysa:
அறிவாற்றல் மற்றும் நடத்தை சிகிச்சை (CBT) நுட்பங்களைப் பயன்படுத்தி, எளிய முறையில் மனதை நிர்வகிக்க உதவுகிறது. மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது, அழகான AI பென்குயின் உங்களுடன் உரையாடி, உங்கள் மனதைக் கவனித்துக்கொள்ளும் பயிற்சிகளை வழங்குகிறது. இது ஒரு தனிப்பட்ட, தீர்ப்புகளற்ற மனப் பயிற்சியாளரைப் போன்றது. இதன் அடிப்படை வசதிகள் முற்றிலும் இலவசம்.
4. Rootd:
உங்களுக்கு திடீரென்று பீதித் தாக்குதல் ஏற்பட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறீர்கள் என்றால், Rootd செயலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் ஒருசில கிளிக்குகளில், பீதித் தாக்குதலைச் சமாளிப்பதற்கான மூச்சுப் பயிற்சி நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கிறது. இதில் உள்ள ‘பானிக் பட்டன்’ (Panic Button) அவசர காலங்களில் உடனடி உதவியை வழங்குகிறது. இதன் மென்மையான மற்றும் எளிமையான வடிவமைப்பு, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.
5. Smiling Mind:
மனநல வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட Smiling Mind செயலி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இது மன அமைதிக்கான குறுகியகால தியான அமர்வுகளை வழங்குகிறது. குறிப்பாக, தூக்கம், மன அழுத்தம் மற்றும் கவனத்தைச் செறிவூட்டுதல் ஆகியவற்றிற்கான சிறப்புத் திட்டங்களும் இதில் உள்ளன. இந்தச் செயலியின் மூலம், தினசரி வாழ்க்கையில் சிறிய அளவில், ஆனால் பயனுள்ள முறையில் மன அமைதியைப் பெறலாம்.
இந்த ஆஃப்கள் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்காது, ஆனால் அவை உங்களுக்குத் தேவைப்படும்போது சிறிய இடைவெளியையும், பாதுகாப்பான இடத்தையும், அல்லது மனதை நிலைநிறுத்தும் தருணத்தையும் அளிக்கலாம். சில சமயங்களில், இந்தச் சிறிய மாற்றங்கள் கூட உங்கள் நாளின் போக்கை மாற்றக்கூடும்.