டோக்கியோவில் விரைவுச்சாலையில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 47 பேர் காயம்

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள விரைவுச்சாலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) சுற்றுலாப் பேருந்துகள் இரண்டு மோதிக்கொண்டதில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்தப் பேருந்துகளில் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவானைச் சேர்ந்த பயணிகள் சென்றதாக ஹாங்காங்கின் டிம்சும் டெய்லி நாளேடு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 10 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அது கூறியது.இருப்பினும், காயமடைந்தோர் யாருக்கும் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறப்பட்டது.
கோபோதோகே சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகே சனிக்கிழமை காலை 10.15 மணியளவில் (ஜப்பானிய நேரம்) அந்தப் பேருந்துகள் மோதிக்கொண்டதாக மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் கூறினார்.
அந்தச் சுரங்கப்பாதை, ஹச்சியோஜி நகரின் சுவோ விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்துகள் இரண்டும் ஜேஆர் தோக்கியோ நிலையத்திலிருந்து புறப்பட்டு அருகிலுள்ள யமனாஷி மாநிலத்தின் கவாகுச்சி ஏரியை நோக்கிச் சென்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.அவை ‘கேகேடே’ நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் என்று நம்பப்படுகிறது.
மேல்விவரங்களுக்காக அந்த நிறுவனத்தையும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சையும் நாடியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
போக்குவரத்து நெரிசல் நிலவிய வேளையில் முன்னால் சென்ற பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதை அடுத்த பேருந்தின் ஓட்டுநர் கவனிக்கத் தவறியதாக ‘கியோடோ நியூஸ்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.