இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே 400 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் கைச்சாத்து
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே 400 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், அதிபர் முய்சு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் முய்சு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது.ஆனால், அண்மைக்காலமாக மாலத்தீவு பல்வேறு நிதிச் சவால்களை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியாவுடனும் நட்பு பாராட்டுகிறார் அதிபர் முய்சு.
தமது இந்தியப் பயணத்தில் அதிபர் திரௌபதி முர்முவை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
சந்திப்பு குறித்துக் கூறிய மோடி, “இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே மாலத்தீவு பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்வதில் மாலத்தீவு பெரும்பங்கு வகிக்கிறது. பல்லாண்டுப் பழமையான இருதரப்பு உறவுகள் வருங்காலத்திலும் தொடரும்,” என்றார்.
அக்டோபர் 8ஆம் திகதி அதிபர் முய்சுவும் அவரது மனைவி சஜிதா முகமதும் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மகாலுக்குச் சென்றனர். இவர்களது வருகையை முன்னிட்டு தாஜ்மகால் இரண்டு மணி நேரத்திற்குப் பொதுமக்களுக்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.