ஒரே வாரத்தில் 40 பில்லியன் டொலர் இழப்பு – கடும் அதிர்ச்சியில் எலான் மஸ்க்
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தலைசிறந்த டெக் நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு, கடந்த ஒரே வாரத்தில் 40 பில்லியன் டொலர் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபலமான மதிப்பீட்டு நிறுவனமான ப்ளூம்பெர்க் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
எனவே அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 189 பில்லியன் டொலர்களாக உள்ளது. இதனால் தற்போது பணக்காரப் பட்டியலில் லூயிஸ் உயிட்டனின் சிஇஓ பெர்னாட் அர்னால்ட் மற்றும் அமேசான் நிறுவனர் ஜேப் பெசாஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக எலான் மஸ்க் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
டெஸ்லாவின் பங்கு விலை சரிந்ததாலேயே இந்த அளவுக்கு பெரும் வீழ்ச்சியை எலான் மஸ்க் சந்தித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இப்போது வரை டெஸ்லாவின் பங்குகள் சுமார் 29 சதவீதம் சரிந்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் 21 சதவீதம் டெஸ்லாவின் பங்குகளில் இருப்பதால், அந்நிறுவனத்தின் சரிவு நேரடியாக எலான் மஸ்கை பாதிக்கிறது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதிலிருந்தே பல சவால்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனம் விளம்பரங்களை தக்கவைத்துக்கொள்வதில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையே அவர் பல மாற்றங்களை செய்து வருவதால், மக்களுக்கு அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்து எலான் மஸ்கின் மற்ற துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இருப்பினும் அவரது செல்வ இழப்பை ஈடு செய்யும் விதமாக பல புதிய முயற்சிகளை செய்வதில் எலான் மஸ்க் ஆர்வம் காட்டுகிறார். அவரது லட்சியம் என்னவென்றால் எக்ஸ் தளத்தை எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் ஒரு டிஜிட்டல் நிலப்பரப்பாக உருவாக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார். ஏற்கனவே பலர் முடியாது என நினைத்த விஷயங்களை முடித்து காட்டிய எலான் மஸ்க், இப்போது வீழ்ச்சியை சந்தித்தாலும், நிச்சயம் தன் இலக்கை அடைவார் என நம்புவோம்.