ஆப்கானிஸ்தானில் மூன்று சுற்றுலா பயணிகள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை
மத்திய ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில்,ஒரு ஆப்கானிஸ்தான் குடிமகன் மற்றும் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு வெளிநாட்டினர் மற்றும் மூன்று ஆப்கானியர்கள் காயமடைந்தனர் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மாதீன் கானி கூறினார்.
மேலும் சம்பவம் குறித்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலிபான் அரசாங்கம் “இந்த குற்றத்தை கடுமையாக கண்டிக்கிறது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அதன் ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறது மற்றும் அனைத்து குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளிக்கிறது” என்று கானி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
கொல்லப்பட்ட மூன்று நபர்களும் ஸ்பெயினின் குடிமக்கள் என்பதை ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சகம் பின்னர் உறுதிப்படுத்தியது.
பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் சமூக ஊடக பதிவில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
அவர் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தூதரக ஆதரவை உறுதியளிப்பதாகவும் சான்செஸ் கூறினார்.