30 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் – விண்டோஸ் கீ போர்டில் அதிரடி மாற்றம்
30 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக விண்டோஸ் கீபோர்டில் ஏஐ புரட்சியை களமிறக்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
1994-ல் விண்டோஸ் உபயோகத்துக்கான ஸ்டார்ட் பட்டன் ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் கீ போர்டில் கடைசியாக புகுத்தியது.
அதன் பின்னர் 30 ஆண்டுகள் இடைவெளியில், அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஏஐ பட்டன் ஒன்றை, கீ போர்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
ஸ்பேஸ் பட்டனின் வலதுபுறம் இந்த ஏஐ பட்டன் இடம்பெற இருக்கிறது. இது சாட்பாட் உட்பட ஏஐ தொடர்பான அனைத்து பயன்பாடுகளுக்கும் திறப்பாக அமையும். இந்த வசதி விண்டோஸ் 11 பதிப்புகளில் கிடைக்கும்.
மைக்ரோசாப்டின் ஹார்ட்வேர் துணை நிறுவனங்கள் இதற்கான தயாரிப்புகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. தற்போதைய ஏஐ பட்டனும் மைக்ரோசாப்டின் ’கோபைலட்’ அம்சமாகவே அறிமுகமாக இருக்கிறது.
ஹார்ட்வேர் மட்டுமன்றி ஏஐ புரட்சி காரணமாக சாஃப்ட்வேரிலும் பெரும் மாற்றங்கள் காணப்பட இருக்கின்றன. அதற்கேற்ப மைக்ரோசாப்ட் பயன்பாட்டாளர்கள் தங்களது கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்துகொள்வதும் அவசியமாகக் கூடும்.
புதிதாக கம்ப்யூட்டர் வாங்க விரும்புவோர், இந்த மாற்றங்களை உள்ளடக்கிய புதிய தலைமுறை வருகைக்காக சற்று காத்திருக்கவும் செய்யலாம்.
2024-ம் ஆண்டினை ஏஐ-க்கான ஆண்டாக டெக் உலகம் பாவிக்கிறது. இதன்படி புதிய தலைமுறை கம்ப்யூட்டர்கள் இனி ’ஏஐ பிசி’(AI PC) என்பதாகவே அடையாளம் காணப்படும்.
கம்ப்யூட்டர் மற்றுமன்றி உள்ளங்கை கம்ப்யூட்டராக மாறிவரும் செல்போனும் அதனது ’ஸ்மார்ட் போன்’ என்ற அடையாளத்திலிருந்து ’ஏஐ போன்’(AI phones) என்பதாக மாற இருக்கிறது. எடையற்றும், செயற்கை நுண்ணறிவின் புதுவித பயன்பாடுகளோடும் இந்த ஏஐ போன்கள் சந்தைக்கு வரும்.