இந்தியாவுடன் 2வது டி20 இன்று – பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து அணி?
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 132 ரன்களுக்குள் சுருட்டியிருந்தனர். இதன் பின்னர் பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 232.35 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி 34 பந்துகளில் 79 ரன்களை விளாசி மிரட்டினார். இதனால் இந்திய அணி 43 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார். டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் 11 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ள சூர்யகுமார் யாதவ் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர், பெரிய அளவிலான இன்னிங்ஸை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளக்கூடும்.
கடந்த காலங்களில் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளது. இதனால் இம்முறையும் அவ்வாறே செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் கூட்டணி மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் முதல் ஆட்டத்தில் கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த அணி சேர்த்த 132 ரன்களில் பட்லர் மட்டுமே 68 ரன்கள் எடுத்திருந்தார். முதல் போட்டி முடிவடைந்ததும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து ரன்கள் சேர்க்கும் வழியை தங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தனிப்பட்ட முறையில் கண்டறிய வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது கள வியூகங்களை மாற்றி அமைத்து இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
பில் சால்ட், பென் டக்கெட் ஜோடி தொடக்க வரிசையில் வலுவான அடித்தளம் அமைத்து கொடுப்பதில் முனைப்பு காட்டக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே நேர்த்தியாக செயல்பட்டிருந்தார். மற்ற எந்த வீரர்களும் அபிஷேக் சர்மாவின் அதிரடியில் இருந்து தப்ப முடியாமல் போனது. ஆதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் கூடுதல் பங்களிப்பை வழங்க தீவிரம் காட்டக்கூடும்.
கஸ் அட்கின்சன் நீக்கம்: இந்திய அணிக்கு எதிராக 2-வது டி 20 ஆட்டத்தில் விளையாடும் 12 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்றே அறிவித்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் நீக்கப்பட்டு பிரைடன் கார்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
அணி விவரம்: ஜாஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட்.
முகமது ஷமி சந்தேகம்: கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விளையாடும் லெவனில் அவர், சேர்க்கப்படவில்லை. சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 2-வது போட்டியிலும் ஷமி களமிறங்குவது சந்தேகம்தான். ஏனெனில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஷமி களமிறக்கப்பட்டால் நித்திஷ் குமார் ரெட்டி நீக்கப்படக்கூடும்.
சேப்பாக்கம் மைதானத்தில் இதற்கு முன்னர் 2 சர்வதேச டி 20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 2012-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 168 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. பிரண்டன் மெக்கல் 55 பந்துகளில், 91 ரன்களும் விளாசியிருந்தார். இந்திய அணியில் விராட் கோலி 41 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு நவம்பரில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 182 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஷிகர் தவண் 92 ரன்களும், ரிஷப் பந்த் 58 ரன்களும் விளாசியிருந்தனர்.
அபிஷேக் சர்மா காயம்: இந்திய அணி வீரர்கள் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பீல்டிங் பயிற்சியின் போது தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், உடலியல் மருத்துவ நிபுணருடன் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின்னர் அபிஷேக் சர்மா பயிற்சியில் பங்கேற்கவில்லை.
‘மனக்கணக்கு’ – இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி: சொந்த மைதானரசிகர்கள் முன்னிலையிலும், எனது பெற்றோர் முன்னிலையிலும் விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயம்.இங்கிலாந்து வீரர்கள் எப்படி ஆட்டத்தை அணுகுகிறார்கள் என்பதை பொறுத்தே திட்டங்களும் இருக்கும். பேட்ஸ்மேனின் வீடியோவை அதிகம் பார்ப்பேன். இதை வைத்து திட்டம் வகுப்பேன். சில ஆடுகளங்களில் சில ஷாட்கள் வேலை செய்யும், சில ஷாட்கள் வேலை செய்யாது. எனவே, அதன் அடிப்படையில், என் மனதில் ஒரு குறிப்பிட்ட கணக்கீடு உள்ளது, அதைச் சுற்றியே நான் வேலை செய்கிறேன்.