டெல்லியில் 109 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 26 வெளிநாட்டினர் கைது
வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), டெல்லி முழுவதும் செயல்பட்டு வந்த போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோக வலையமைப்பை அழித்து, சுமார் ரூ.109 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, 26 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது.
அக்டோபர் 21-23க்கு இடையில் நடந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 16.27 கிலோ ஆம்பெடமைன் (amphetamine), 7.9 கிலோ கோகைன் (cocaine), 1.8 கிலோ ஹெராயின் (heroin), 2.13 கிலோ கஞ்சா (ganja) மற்றும் 115.42 கிலோ ரசாயனங்களை (chemicals) பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், இவர்களுடன் தொடர்புடைய பலர் நகரம் முழுவதும் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளை தொடர்ந்து அவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த போதைப்பொருட்களின் சட்டவிரோத சந்தை மதிப்பு ரூ.108.81 கோடி என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





