கடந்த ஆண்டு 24 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் 24 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (SLHRC) தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் ஆயுதங்களை மீட்க இரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை அடிக்கடி பதிவாகி வருவதாகவும், தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான பொலிஸாருக்கு எதிராக SLHRC க்கு 9,417 பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 44 யுக்திய நடவடிக்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.