அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித காலடித்தடங்கள் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் சுமார் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித காலடித்தடங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒயிட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவில் ஆய்வாளர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது பழமையான காலடித்தடங்கள் கண்டறியப்பட்டது. வட அமெரிக்க மக்களின் காலடித்தடங்கள் என கருதப்பட்ட இந்த காலடி தடங்கள் குறித்து கார்பன் டேட்டிங் முறையிலும், நவீன முறைகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த சோதனைகளின் முடிவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த காலடித்தடங்கள் 23,000 முதல் 21,000 ஆண்டுகள் வரை பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம் மனித இனம் அதற்கு முன்பே வேறு கண்டங்களில் உருவாகி 21,000 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க கண்டத்தில் தடம் பதித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆப்ரிக்க கண்டத்தில் சுமார் 2 லட்சம் வருடங்களுக்கு முன்பு உருவான மனித இனம், பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து கண்டங்கள் பிரிவால் வெவ்வேறு கண்டங்களுக்கு சென்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் அமெரிக்க கண்டத்திற்கு மனிதர்களின் வரவு மிகக்குறுகிய காலத்தில் நடைபெற்றிருக்கலாம் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது இந்த காலடிசுவடுகளின் காலத்தை துல்லியமாக கண்டறியும் ஆய்வில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.