2025 சீர்திருத்தங்கள் தேசிய இயக்கமாக மாறிய ஆண்டாக நினைவுகூரப்படும்
கடந்த 11 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான தேசிய இயக்கமாக மாறிய ஆண்டாக 2025 நினைவுகூரப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு, இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘‘இந்தியாவின் சீர்திருத்தப் பயணத்தில் 2025 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையான காலகட்டமாக அமைந்தது. பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி கொள்கை மாற்றங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்தி, வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தி உள்ளன.
நாட்டின் இளம் தலைமுறையினர், தொழில்முனைவோர் ஆற்றல், மக்களின் அசைக்க முடியாத மன உறுதி ஆகியவற்றின் காரணமாக இந்தியா சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறியுள்ளது.
இந்தியாவின் இந்த எழுச்சி, மக்களை மையப்படுத்திய, பல்துறை சார்ந்த, வளர்ச்சி நோக்குடைய அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களில் இருந்து உருவாகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான தேசிய இயக்கமாக மாறிய ஆண்டாக 2025 நினைவுகூரப்படும்.
விரைவான செயலாக்கம், ஆழமான மாற்றங்கள், எளிதாக்கப்பட்ட நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை இந்த ஆண்டு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவீன வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டது. 100 கோடி ரூபா வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
காப்பீட்டுத் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நியாயமான சம்பளம், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணியிடங்கள், பெண்களின் அதிகப்படியான பங்களிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக 29 சட்டங்கள், ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் வழிகாட்டும் நோக்கமாக தொடர்கிறது” என்றார்.





