தென் கொரிய விமானப்படை தளத்தை படம் பிடித்த 2 சீன இளைஞர்கள் கைது

தென் கொரிய விமானப்படை தளத்தில் இராணுவ விமானங்களை சட்டவிரோதமாக புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சீன ஆண்களை தென் கொரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மார்ச் மாதம் 21ஆம் திகதி அன்று சியோலுக்கு தெற்கே சுமார் 20 மைல் தொலைவில் உள்ள சுவோன் விமான தளத்திற்கு அருகில் விமானங்களை படம்பிடித்ததாக ஒரு குடியிருப்பாளர் புகாரளித்ததை அடுத்து இந்த கைதுகள் நடந்தன.
இரண்டு இளைஞர்களிடமிருந்தும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு டிஜிட்டல் கமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த சாதனங்களில் இராணுவ விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் புகைப்படங்கள் இருந்ததாகவும், அவை விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இளம் சந்தேக நபர்கள் அதிகாரிகளிடம், தாங்கள் தென் கொரியாவில் பயணம் செய்து வருவதாகவும், விமானப் போக்குவரத்து ஒரு பொழுதுபோக்காக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
விசாரணைக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.