Tamil News

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெறவுள்ள 1760 மாணவர்கள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 07ஆம் 08ஆம் திகதிகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் 42வது வருடத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,கிழக்கு பல்கலைக்கழகத்தின் 26வது பொது பட்டமளிப்பு விழா ஒக்டோபர் மாதம் 07ஆம் 08ஆம் திகதிகளில் கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வானது ஓய்வுபெற்ற பேராசிரியரும் வேந்தருமான மா.செல்வராசா அவர்கள் தலைமைதாங்குவதுடன் இந்த நிகழ்வானது இரண்டு நாட்களில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வின் முதல்நாள் நிகழ்வில் மனித அபிவிருத்திக்கான தலைவர் பேராசிரியர் மனிச அத்துபான அவர்களும் இரண்டாம் நாளில் முதல் அமர்வில் பொதுநலவாய கல்விக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் ஆர்ஸா கன்வர் என்பவரும் உரையாற்றவுள்ளனர்.

Eastern University (2022 / 2023) Intakes, fees, courses and branches

இந்த பட்டமளிப்பு விழாவில் கலாநிதி பட்டத்தினை ஒருவரும் ஐந்து பேர் விஞ்ஞான கல்வி முதுமாணி பட்டத்தினையும் 14பேர் விவசாய விஞ்ஞானத்தில் முதுமானி பட்டத்தினையும் 12கலைமுதுமானி பட்டத்தினையும் 08வியாபார வர்த்தக முதுமானி பட்டம் என முதல் நாள் அமர்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பின்படிப்பினை பூர்த்திசெய்த 268மாணவர்களுக்கு பட்டமளிப்பு செய்யப்படவுள்ளது.இந்த நிகழ்வின்போது இரண்டு நாட்களில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் 1760 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பீட மாணவர்களும் பட்டம்பெறுவார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வில் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்களும் திருகோணமலை வளாகத்திலிருக்கின்ற முகாமைத்துவ தொடர்பாடல் பீட மாணவர்களும் இரண்டாம் நாளில் மூன்றாம் அமர்வில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களும் அந்த பட்டத்தினைப்பெறுகின்றனர்.
இந்த இரண்டு நாளுடன் இணைந்ததாக ஒக்டோபர் முதலாம் திகதி கிழக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 42வது ஆண்டு பூர்த்தியாகின்றது.இந்த வாரத்தினை கிழக்கு பல்கலைகழக வாரமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஓழுங்குசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலான ஆய்வுக்கருத்தரங்குகள்,பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவப்படுத்தும் வகையிலான கௌரவிப்பு நிகழ்வு,கிழக்கு பல்கலைக்கழகத்தினை சமூகத்துடன் இணைத்துக்கொள்ளும் வகையில் ஒக்டோபர் 03ஆம் திகதி தொடக்கம் திறந்த நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாளில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கின்ற,பல்கலைக்கழகத்தினை அறிந்துகொள்ளவிரும்புகின்ற பொதுமக்கள் பல்கலைக்கழகம் வந்து பல்கலைக்கழகத்தின் நாளாந்த செயற்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்த திறந்த தினம் கிழககுபல்கலைக்கழகத்தில் முதன்முறையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த 42ஆண்டு விழாவில் அதிகூடிய காலம் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் கௌரவப்படுத்துகின்ற அதேநேரம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சர்வதேச மட்டத்தில் விருதுகளைப்பெற்ற ஆய்வாளர்களும் இதன்போது கௌரவிக்கப்படுகின்றனர்.கிழக்கு பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி ஒரு பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.அந்தவேளையில் கல்லூரியின் பணிப்பாளராகயிருந்தவரின் நாமத்தினைக்கொண்டே அந்த நாளை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.அதன் பின்னர் கடமையாற்றிய உபவேந்தர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அதிஉன்னத சேவை வழங்கிய காலஞ்சென்ற பேராசிரியர் இராஜேந்திரன் அவர்களுடைய பெயரை பயன்படுத்தி அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழங்களுடனான விளையாட்டு நிகழ்விற்கான விளையாட்டு அரங்கினை அங்குரார்ப்பணம் செய்திருந்தோம்.

அத்துடன் பல்கலைக்கழகம் சமூகத்துடன் இணைந்து சேவையாற்றும் வகையில் பல்கலைக்கழகத்தினையும் சமூகத்தினையும் இணைக்கும் நிறுவனம் காணப்படுகின்றது.அதன் ஊடாக பல்கலைக்கழகத்தின் அறிவுசார் விடயங்களை கிராம அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.அதன் கீழ் சவுக்கடி என்னும் கிராமத்தினை தத்தெடுத்துள்ளோம்.அங்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.ஒக்டோபர் முதலாம் திகதி எமது பல்கலைக்கழக வாரத்தினை நாங்கள் அங்குதான் ஆரம்பிக்கின்றோம்.

Exit mobile version