திருகோணமலையில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலையில் கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பேமரத்னகே உமேஷ் ஆலோக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வழமையாக நண்பர்களுடன் குளிப்பதற்கு செல்வதாகவும் இன்றைய தினமும் வீட்டிலிருந்து சென்றதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் இரவு மீட்கப்பட்டதாகவும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன் மதவாச்சி சிங்கள வித்தியாலயத்தில் 11ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர் ஆவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)