ராஜஸ்தானில் பிக்கப் வேன்-லொரி மோதிய விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 பேர் ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள பாபி கிராமத்திற்கு அருகே கதுஷியாம் கோயிலில் சாமியைத் தரிசிக்கச் சென்றனர்.
தரிசனம் முடிந்து, பிக்-அப் வாகனத்தில் பக்தர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது புதன்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் பாபி அருகே தௌசா-மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கொள்கலன் லொரி ஒன்றின் மீது மோதியது.
அந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகளின் வயது 6 முதல் 7 வயது என்று தௌசா மாவட்ட துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் ரவி பிரகாஷ் சர்மா கூறினார்.
பலத்த காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
அதிகாலையில் நிகழ்ந்த விபத்துக்குக் காரணம் வாகன ஓட்டுநரின் தூக்க கலக்கமா, அவர் மது அருந்தி இருந்தாரா, அல்லது லாரி சாலையோரம் இருட்டுக்குள் நிறுத்தப்பட்டு இருந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





