இந்தியாவில் கோயிலுக்கு அருகே புதைக்கப்பட்ட 100 பெண்கள் : மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!

கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அண்மையில் பகீர் தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார்.
அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் ஊழியர் நேத்ராவதி நதி படித்துறைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சுட்டிக்காட்டிய இடங்களில் அவர் முன்னிலையில் அகழாய்வு பணிகளை புலனாய்வு குழு மேற்கொண்டது.
அவர் குறிப்பிட்ட முதல் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் 6 வதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் இது முதல் தடயமாக மாறியுள்ளது.
அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஆதாரங்களை சிதைக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தர்மஸ்தலாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.