சீனாவில் 11 வயதுச் சிறுவனின் வயிற்றில் 100 கிராம் தங்கக் கட்டி
சீனாவின் ஜியாங்சு (Jiangsu) வட்டாரத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவனின் வயிற்றில் 100 கிராம் தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைக்கு வயிற்று வலி என்று வருந்திய பெற்றோர் மகனை மருத்துவரிடம் காட்டினர். மகனின் பிரச்சினைக்குக் காரணம் தங்கமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டியை விழுங்கியுள்ளார். சிறுவனின் உடலிலிருந்து கட்டி இயல்பாக வெளியேறுவதற்கு மருத்துவர்கள் காத்திருந்தனர்.
ஆனால் இரண்டு நாள்களான பிறகும் தங்கக் கட்டி அசையவில்லை. சிறுவனின் குடலில் அது அடைப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சிய மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முடிவெடுத்தனர்.
சிறுவனின் உடலிலிருந்து தற்போது தங்கக் கட்டி அகற்றப்பட்டுள்ளது.





