வரலாற்றுச் சிறப்பு மிக்க பேயக்ஸ் திரைச்சீலை – £800 மில்லியன் காப்பீடு வழங்க பிரித்தானிய கருவூலம் தீர்மானம்
பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலைக்கு, சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக £800 மில்லியன் மதிப்பிலான காப்பீடு வழங்க பிரித்தானிய கருவூலம் தீர்மானித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பான பேயக்ஸ் திரைச்சீலை அடுத்த ஆண்டு பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
1066 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேஸ்டிங்ஸ் போரை சித்தரிக்கும், சுமார் 70 மீற்றர் நீளமுள்ள, துணியில் தையல் மேற்கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைப்படைப்பு இதுவாகும்.
இந்த கலைப்பொருள், இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரான்சிலிருந்து லண்டனுக்கு கடனாக வழங்கப்படவுள்ளது.
58 காட்சிகள், 626 மனித உருவங்கள் மற்றும் 202 குதிரைகளை கொண்ட இந்த தலைசிறந்த படைப்பு, வில்லியம் தி கான்குவரர் (William the Conqueror), ஹரோல்ட் காட்வின்சன் (Harold Godwinson) இடமிருந்து ஆங்கில அரியணையை கைப்பற்றி, இங்கிலாந்தின் முதல் நார்மன் மன்னராக உயர்ந்த காலத்தை சித்தரிக்கிறது.
இந்த கலைப்பொருளின் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் காட்சிப்படுத்தல் காலம் முழுவதும், அரசாங்க இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும்.
இந்தத் திட்டம், இழப்பு அல்லது சேதம் ஏற்படும் சூழ்நிலைகளையும் உள்ளடக்கும்.
வணிகக் காப்பீடு எடுப்பது மிக அதிக செலவாக இருக்கும் என்பதால், இந்த அரசாங்கத் திட்டம் இல்லையெனில் பொதுத் அருங்காட்சியகங்கள்
பெரும் நிதிச் சுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கருவூலம் தெரிவித்துள்ளது.
சில பிரான்ஸ் கலை நிபுணர்கள், சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்த தையல் கலைப்படைப்பு மிகவும் நுட்பமான முறையில் இருப்பதால்,
அதனை இடம் மாற்றுவது ஆபத்தானது என கவலை வெளியிட்டுள்ளனர். ஆனால், இந்தக் கருத்தை பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.





