ரயிலில் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்கயா புகையிரதத்தின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட சிசுவின் தாயும் தந்தையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (15) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தம்பதியினரும் அவர்களது பெற்றோரும் குழந்தையை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்ததால், சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் எந்தவொரு பிணை நிபந்தனைகளின் கீழும் அவர்களை விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரினர்.
அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதவான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதே நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இது தொடர்பாக நன்னடத்தை அறிக்கையை கோர வேண்டும் என்றார்.
இதேவேளை, குழந்தையின் பிறப்பு தொடர்பான விசாரணைகளுக்காக வெரஹெர கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை நீதவான் இன்று அனுமதித்தார்.