யால பூங்காவில் இருக்கும் கரும்புலியின் உயிருக்கு ஆபத்து
யால பூங்காவில் கரும்புலி நடமாடும் ஜபுரகல பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்ததையடுத்து, அந்த மிருகத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விலங்கின் பாதுகாப்பு கருதி நேற்று (29) முதல் குறித்த பகுதியை மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யால பூங்காவில் 7 மாத கரும்புலி சுற்றித் திரிவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், நேற்று (28) புகைப்படக் கலைஞர் ஒருவர் அந்த விலங்கைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் உறுதியாகியுள்ளது.
இதேவேளை யால பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகளும் புகைப்படக் கலைஞர்களும் அதிகளவில் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக யால பூங்காவில் கரும்புலி ஒன்று பதிவாகியமை இதுவே முதல் தடவையாகும்.
இந்த மிருகம் தனது தாயுடன் சுற்றித் திரிந்த போது சில சஃபாரி ஜீப் ஓட்டுநர்கள் தங்கள் ஜீப்புகளை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், இந்த மிருகம் சுற்றித்திரியும் பகுதியை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மூடுவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும், ஜபுரகல பகுதி வேட்டையாடுபவர்களின் பொறியாக இருப்பதால், அந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை தடை செய்வதன் மூலம் இந்த விலங்கு வேட்டையாடுபவர்களுக்கு பலியாகலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரங்வெல்ல சுட்டிக்காட்டுகிறார்.