மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 252 காளைகளும் 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த மஞ்சுவிரட்டு போட்டியினை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு ஷேர், பீரோ, அண்டா , சைக்கிள், போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே 300க்கும் மேற்பட்ட காளைகள் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் பார்வையாளர்கள், மாடுபிடிவீரர்கள், சாலையில் சென்றவர்கள் என காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சுமார் 15 க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் மஞ்சுவிரட்டு காண வந்த காரைக்குடியைச் சேர்ந்த ஆதியான் என்பவரின் மகன் பாண்டி (32) என்பவரும், கொட்டாம்பட்டி அருகே மங்கலாம்பட்டியைச் சேர்ந்த அழகு என்பவரின் மகன் முருகன் (55) என்பவரும் மாடுமுட்டியதில் உயிரிழந்தனர். பாண்டியனின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், முருகனின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.சிறப்பு விருந்தினராக இலங்கை மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான், மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஒண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இம்மஞ்சுவிரட்டு போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம் ஆகியோர் செய்து இருந்தனர். நடைபெற்ற மஞ்சுவிரட்டில் கண்டரமாணிக்கத்துக்கு உட்பட்ட ஐந்து கிராமம் மற்றும் 9 கரை கிராமம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.