புட்டினை சந்திப்பதற்கு முன் மோடியை தொலைபேசியில் அழைத்த ஜெலென்ஸ்கி

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த மாதம் பிரதமர் மோடியும் அதிபர் ஜெலென்ஸ்கியும் தொலைபேசியில் உரையாடுவது இது இரண்டாவது முறையாகும்.
தொலைபேசி உரையாடலின் போது, நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் இலக்குகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய போதிலும், ரஷ்யத் தலைவரைச் சந்திக்க உக்ரைன் தனது தயார்நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மொஸ்கோ இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்றும் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வாஷிங்டனில் உள்ள பிற ஐரோப்பிய தலைவர்களுடனான தனது பேச்சுவார்த்தை குறித்து இந்தியப் பிரதமர் மோடியிடம், ஜெலென்ஸ்கி ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார், மேலும் அமைதி குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை, குறிப்பாக SCO உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பாராட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் இன்று நடைபெறும் 2025 SCO உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார், அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த உச்சிமாநாட்டின் போது அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.