பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கரிசனை!
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகப் பிறிதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டது.
இது குறித்து விசனம் வெளியிட்டுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் குறித்த சட்டத்தின் உள்ளடக்கங்கள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் மிகமோசமானதாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை பிரகடனம் ஆகியவற்றின் மூலமான அதிகாரங்களைக் கடந்தகால அரசாங்கங்கள் பயன்படுத்திய விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டமூலமானது பெருமளவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது எனவம் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.