நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அமுல்படுத்திய சுங்கவரிகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், தனியார் துறைக்கான கடன் ஓட்டத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவசர பணப்புழக்க உதவி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவத்திற்கு குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டம் வேகமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கி திட்டத்தில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க ஏப்ரல் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
அரச நிறுவனங்களின் வணிக செயல்திறன், நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் துறை பங்கேற்பை மேம்படுத்த, பொது தனியார் கூட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, பொது நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன.
வருவாய் சமநிலைமையை உறுதி செய்வதற்காக வரி சீராக்கல் மேற்கொள்ளப்படும். மேலும் அமுலாக்கப்பட்ட சுங்கவரிகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட இந்த சீராக்கலினால் கிடைக்கும் வருமானம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், ஒருங்கிணைந்த முதலீட்டுச் சட்டம் செயற்படுத்தப்படும், மேலும் வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.