சூரியனில் தென்பட்ட மிக பெரிய துவாரம்; விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!
சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.இது கொரோனல் ஓட்டை என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது.
இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23ம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.
கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான NOAA எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது இன்று நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பூமியின் காந்த புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். ஒருவாரத்தில் சூரியனில் தோன்றிய 2வது துளை இது என தெரியவந்துள்ளது.