சூடானில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் ; 14 பேர் பலி 20 பேர் படுகாயம்
வடக்கு சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் எல்லைக்குட்பட்ட ஜெபல் அல்-அஹ்மரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த தங்கச் சுரங்கத்தில், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் இந்த சுரங்கம் திடீரென்று இடிந்து சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனடியாக பொலிஸாருக்கும், மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், மீட்புக்குழுவினரும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி தங்க சுரங்க கிணறுகளுக்குள் தேடினர்.இந்த விபத்தில், 14 சுரங்கத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட பொலிஸார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து சூடான் கனிம வள நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறுகையில்,நேற்று வாடி ஹல்ஃபா நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல் ஜபல் அல் அஹ்மர் சுரங்கத்தின் அருகே மலைப்பகுதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.இடிபாடுகளில் சிக்கிய 20 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் சுரங்கத்தின் நிலத்தடி நீருக்கு அடியில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.