சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டம் தொடர்பில் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்ற விவாதம்
ர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருதாதர நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக கடந்த (10) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இராஜதந்திர பிரதானிகளுடனான இக்கலந்துரையாடலில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தியதோடு இந்த வேலைத்திட்டம் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல், இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான நல்லிணக்க செயல்முறை போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தத்தின் இந்த கடினமான மற்றும் இலட்சியத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அதற்கு எமக்கு மிகக் குறைவான தெரிவுகளே எஞ்சியிருந்ததோடு, அதற்கான வலுவான முயற்சியாக இந்த ஆரம்பத்தை கருதலாம்.
இந்த வேலைத்திட்டம் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, குறிப்பாக நிதி சீர்திருத்தம், இலங்கையரின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமாகும். நல்லிணக்க செயல்முறை போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது வரிக் கொள்கை நடவடிக்கைகளை உள்ளடக்கிய வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மீளாய்வு செய்யும் போது, செப்டெம்பர் மாதத்தில் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய மேலும் பல விடயங்கள் உள்ளன உதாரணமாகக் கூறுவதாயின், ஜனவரி மாதத்தில் கலால் வரி 20% இனால் அதிகரிக்கப்பட்டபோது, சட்டப்பூர்வ கொள்முதல் குறைந்ததாலும், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்ததாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை . 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி மற்றும் மொத்த தேசிய உற்பத்தி வீதம் 14% ஆக காணப்படுவதாகவும் கடினமான இலக்காக இருப்பினும் அதனை அடைய முடியும்.
வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் செலவினங்களை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய அரச நிதி முகாமைத்துவ (PFM) சட்டத்தை உருவாக்குவது, அரச கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் ஊழலைக் குறைக்கும் போது, நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக அடிப்படை நிதி கையிருப்பை மீண்டும் அதிகரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய அரச நிதிக் கொள்கை செயற்பாடுகள், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்படுகிறது.
உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் கட்டமைப்பு சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் அவை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் சில நடவடிக்கைகளை வலுப்படுத்துகின்றன.
உலக வங்கி திட்டத்தின் கீழ், நிதி கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு அதில் இரண்டு படிகளை உள்ளடக்கியது. அதிலொன்று பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டத்தின் மூலம் பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை நிறுவுவது அதில் ஒரு முன்னெடுப்பாகும். 2023 ஆண்டு மே மாதத்திற்குள் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை செயல்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.
இதுகுறித்து, மக்களை தெளிவுபடுத்த கட்டாய கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. அதன்பின், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அரச நிதிக்குழுவுக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இது பாராளுமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு செயல்முறையாகும். இது ஏப்ரல் 17 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏப்ரல் 25 முதல் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், தற்போது சட்டத்தின் கீழ் உள்ளடங்காதா பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரச கடன் முகாமைத்துவச் சட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. மறுசீரமைப்பு மற்றும் வணிகமயமாக்கப்படும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இறையாண்மை உத்தரவாதங்களை வழங்குதல் மற்றும் கடன் வழங்குதல் போன்ற செயல்முறைகள் இதில் அடங்கும். ஏற்கனவே பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டாய வருமான வரி சட்டத்துடன் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதையும் 2024 முதல் காலாண்டில் வரி கணக்காய்வு மற்றும் இணக்கத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.