சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிகள் நிராகரிக்கப்பட்டன
சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதிகளை அங்கீகரிப்பது மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக 1 வாக்கும் அளிக்கப்பட்டன. இலங்கை சட்டக்கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவது தொடர்பில் சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் நீதி அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையினால் 2020 டிசம்பர் 30 ஆம் திகதிய 2208/13ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிகள் குறித்த பிரேரணை கடந்த மார்ச் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை சட்டக்கல்லூரியின் பரீட்சைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு சட்டக்கல்விப்பேரவை எடுத்த தீர்மானத்துடன், அண்மையில் கூடிய நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆமைச்சுசார் ஆலோசனைக் குழு இணங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.