கூகுள் டயலர் UI மாற்றம் – சிக்கலில் பயனர்கள்

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான ‘கூகுள் போன்’ செயலிக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில், புதிய யூசர் இன்டர்ஃபேஸ் (UI), சைகைகள் மற்றும் மெட்டீரியல் டிசைன் 3 போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்ப்புகளைச் சந்தித்த புதிய யுஐ
திடீர் மாற்றத்தால் பயனர்கள் மகிழ்ச்சியாக இல்லை. டயலர் செயலியின் இண்டர்பேஸ் மட்டுமன்றி, அழைப்புகளை ஏற்பது மற்றும் துண்டிப்பது போன்ற செயல்பாடுகளும் மாறியுள்ளதால், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த மீம்களும், பதிவுகளும் வேகமாகப் பரவி வருகின்றன. பல வருடங்களாகப் பழகிய ‘மசில் மெமரி’ பாதிக்கப்பட்டதாலும், தவறான முறையில் அழைப்புகள் துண்டிக்கப்படுவதாலும் இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புகளை (contacts) எளிதாக அணுக முடியாததும் குறையாகப் பார்க்கப்படுகிறது.
பழைய யுஐ-க்குத் திரும்புவது எப்படி?
நீங்களும் அல்லது உங்கள் பெற்றோரும் புதிய யுஐ-யால் சிரமப்படுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். பழைய டயலர் செயலியை மீண்டும் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
ஆட்டோ அப்டேட் நிறுத்துங்கள்: முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளேஸ்டோர் செயலியைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள உங்கள் புரோஃபைல் ஐகானைத் தட்டவும். பிறகு, ‘Settings’ > ‘Network preferences’ > ‘Auto-update apps’ பகுதிக்குச் சென்று, ‘Don’t auto-update apps’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது, செயலி தானாக அப்டேட் ஆவதைத் தடுக்கும்.
அப்டேட்டுகளை நீக்குங்கள்: இப்போது பிளே ஸ்டோரில் Google Phone எனத் தேடவும். தேடல் முடிவுகளில் வரும் செயலியைத் தட்டி, ‘Uninstall updates’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது, டயலர் செயலியை அதன் பழைய நிலைக்கு மாற்றிவிடும்.
தற்காலிக பைல்களை நீக்குங்கள்: செயலியைக் கையாள்வதற்கு முன், உங்கள் போனின் Settings > Apps > Phone பகுதிக்குச் சென்று, Storage பிரிவில் உள்ள ‘Clear cache and data’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் போனில் பழைய, பழக்கமான டயலர் செயலி மீண்டும் வந்துவிடும்.
உங்கள் ஸ்மார்ட்போனில், அதன் தயாரிப்பாளர் வழங்கிய பிரத்யேக டயலர் செயலி இருந்தால், அதை உங்கள் default தொலைபேசி செயலியாக அமைப்பது ஒரு சிறந்த மாற்று வழியாகும். இப்படிச் செய்வதால், ஆட்டோ அப்டேட்டுகளை அணைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இது, பொதுவாகப் பரிந்துரைக்கப்படாத ஒரு செயலாகும்.