கனிம கடத்தலை நிறுத்துக
கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர்,
மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக்கற்கள் போன்ற கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இது குறித்து விவசாய சங்கங்கள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் கனிம வளங்கள் கொள்கையை தடுக்க கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக விளங்கிவரும் கோவையிலிருந்து தினமும் ராட்சச லாரிகளில் பத்தாயிரம் யூனிட்டுக்கு மேல் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி சங்கத்தின் தலைவர் யுவராஜ்,செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது பேசிய அவர், கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதில் சில முக்கிய கனிமவளத்துறை மற்றும்
காவல் துறை உயர் அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும்,இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளதாக கூறினார்..
குறிப்பாக, தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் காவல் துறை மற்றும் வருவாய் துறை செக்போஸ்ட்டுகளான வேளந்தாவளம், ஜமீன் காளியாபுரம் ஆகியவற்றின் வழியாக இந்த கனிம கடத்தல் நடைபெறுவதாகவும் புகார் தெரிவித்தார்.
விரைவில் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக கூறிய அவர், தற்போது நடைபெற்று வரும் கனிம கொள்ளையை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்விவகாரத்தை முதலமைச்சர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும் என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டார்.