கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை…
பிரித்தானிய பாஸ்போர்ட் அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அதைப் பயன்படுத்திக்கொண்டு சில மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற முயல்வதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
தற்போதைய சூழலில், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு 10 வாரங்கள் ஆகும். அதாவது, இன்று நீங்கள் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்தால், ஜூன் இறுதியில் உங்கள் பாஸ்போர்ட் உங்களை வந்து சேரலாம்.இந்நிலையில், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்.விரைவாக பாஸ்போர்ட் புதுப்பிக்க தங்களை அணுகுமாறு மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் இந்த மோசடியாளர்களால் அனுப்பப்படுகின்றன.
The Chartered Trading Standards Institute (CTSI) என்னும் அமைப்பு, மக்கள் இந்த மோசடியாளர்களை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரித்துள்ளது. விரைவாக பாஸ்போர்ட் புதுப்பிக்கலாம் என நம்பி அந்த மோசடியாளர்களிடம் விவரங்களை தெரிவித்தால், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன் பணத்தையும் இழக்க நேரிடலாம் என எச்சரிக்கிறது CTSI அமைப்பு.
சாதாரணமாக, வயது வந்த ஒருவருக்கு பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான கட்டணம், ஒன்லைன் வாயிலாக 82.50 பவுண்டுகள், தபால் மூலமாக 93 பவுண்டுகள் மட்டுமே.16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு ஒன்லைன் வாயிலாக 53.50 பவுண்டுகள், தபால் மூலமாக 64 பவுண்டுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே, மோசடிகளிலிருந்து தப்ப, மக்கள் பாஸ்போர்ட்களை புதுப்பிப்பதற்காக அரசின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.