ஐ.எம்.எஃபின் கடன் குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து!
இலங்கை அரசாங்கத்தின் நீண்ட காலக் கோரிக்கைக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் தொகையை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு பிணையெடுப்பு (பெயில்-அவுட்) அல்ல.
இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.
எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அட்வகாட்டா அமைப்பு குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு பிணையெடுப்பு (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.
எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது எனத் தெரிவித்துள்ளது.