எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் வன்முறை மோதல்கள் உக்கிரம்
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில், உள்ளூர் பாதுகாப்புப் படைகளை காவல்துறை மற்றும் தேசிய இராணுவத்தில் ஒருங்கிணைக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான ஆறாவது நாள் ஆர்ப்பாட்டத்தின் போது செவ்வாயன்று பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பியாவின் 11 பிராந்தியங்களில் இரண்டாவது பெரிய மாநிலமான அம்ஹாரா, அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களால் பல நாட்கள் குழப்பமடைந்துள்ளது.
இது மற்ற பிராந்தியங்களிலிருந்து தாக்குதலுக்கு அம்ஹாரா பாதிக்கப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை பிரதம மந்திரி அபி அஹமட்டின் அரசாங்கத்திற்கு ஒரு புதிய பாதுகாப்பு சவாலை முன்வைத்துள்ளது எனவும் விமர்சிக்கப்படுகின்றது.
இது குறித்து கொம்போல்சா ஆளுநர் முகமது அமீன் கூறுகையில், அம்ஹாரா பிராந்தியப் படையைச் சேர்ந்த சிலரை கூட்டாட்சிப் படையினர் கடத்திச் சென்றதாக தவறான தகவல் பரவியதை அடுத்து, போராட்டக்காரர்கள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுத்தது என தெரிவித்துள்ளார்.