இலங்கைக்கு 330 மில்லியன் டொலர் முதலாம்கட்ட நிதி இரு தினங்களில் வழங்கப்படும்
நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.
அதன்படி முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இன்னும் இருதினங்களில் இலங்கைக்கு வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்திவரும் மிகவும் சவாலான பொருளாதார கொள்கைசார் மறுசீரமைப்புக்களைப் பாராட்டியுள்ள நாணய நிதிய அதிகாரிகள், இம்மறுசீரமைப்புக்கள் மற்றும் வரியறவீடு என்பன வறிய, பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இழிவளவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது. அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதன் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்ட ஆவணம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த பணிப்பாளர் சபை, எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர்களை (சுமார் 3 பில்லியன் டொலர்) வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் பணிப்பாளர் சபையின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்கும் நோக்கில் இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்கிழமை (21) காலை 8 மணிக்கு (வொஷிங்டன் நேரப்படி 20 ஆம் திகதி இரவு 10.30 மணி) வொஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் இலங்கைக் கிளைத்தலைவர் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.