ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ஹரியானா மாநில வாலிபர்கள்
கோவையில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன பணியிடங்களுக்கு நாடு தழுவிய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்ட அனைவரது போட்டோ மற்றும் கைவிரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டிருந்தன.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது முதல் நான்கு இடங்களில் தேர்வு பெற்று இருந்த வாலிபர்களின் கைவிரல் ரேகைகள், தேர்வு எழுதிய போது எடுக்கப்பட்டிருந்த விரல் ரேகையுடன் ஒத்துப் போகவில்லை.
ஹால் டிக்கெட்டில் இருந்த போட்டோ, நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கு சற்றும் தொடர்பு இல்லாமல் இருந்தது. சந்தேகம் கொண்ட வன மரபியல் நிறுவன அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்திருந்த வாலிபர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து வேறு வாலிபர்களை தேர்வு எழுத வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வனமரபியல் நிறுவன அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட சாய் பாபா காலனி போலீசார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆர். அமித் குமார்,எஸ். அமித் குமார், அமித், சுலைமான் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.