ஆளுங்கட்சியின் வெற்றி தற்காலிகமானது – ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவுகளாக தான் தாமக கருதுகிறது என்றார்.
அதற்கு எடுத்துக்காட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசங்கள், ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுவிட்டதாகவே வாக்காளர்கள் கருதுகிறார்கள் எனவும் மக்களிடம் பொதுவாகவே மனமாற்றம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
அழுத்தத்திற்காக மக்கள் கட்டுப்படக்கூடாது என கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு கண்காணிப்பு நடவடிக்கைகள் எல்லாம் நியாயமான தேர்தலுக்கு அவசியம் என கூறிய அவர், இது வருங்கால தேர்தலுக்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
ஆளுங்கட்சியை பொறுத்தவரை அவர்களுடைய ஆட்பலம் பண பலத்தை வைத்து ஏழை எளிய நடுத்தர மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து பட்டியில் பூட்டி வைத்து வாக்குகளை பெறுவது என்பது இந்திய வரலாற்றிலேயே எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத ஒன்று என விமர்சித்தார்.
மேலும் ஒரு தொகுதி இடைத் தேர்தலுக்காக மீதமுள்ள 233 தொகுதிகளில் ஒரு மாத காலமாக வளர்ச்சி திட்டங்கள் நடைபெறவில்லை என்பதை அந்தந்த தொகுதி மக்களே நன்கு அறிவார்கள் என்றார்.
ஆளும் கட்சிக் கூட்டணி வெற்றி என்பது ஒரு தற்காலிகமான வெற்றியாகவே நான் கருதுகிறேன் எனவும் இது செயற்கையான வெற்றி எனவும் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் ஜனநாயகத்திற்கான தேர்தலாக தேர்தல்கள் அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்த அவர் தேர்தல் ஆணையம் தமிழகத்தின் ஆட்சியாளர்களுடைய ஆட்பலம் பணபலம் அதிகாரபலம் ஆகியவற்றைத் தாண்டி முறையாக செயல்பட்டு இருக்க வேண்டும் எனவும்,
உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதிமுகவிடம் ஒற்றுமை இல்லை என அண்ணாமலை தெரிவித்ததாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் அது போன்று அண்ணாமலை கூறவில்லை தவறானவற்றை சித்தரிக்க வேண்டாம் என்றார்.
இந்த தேர்தலில் இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி அதிமுக இவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறது என்றால் உண்மையிலேயே மக்கள் மனதில் அதிமுக இடம் பெற்றுள்ளது எனவும் மக்களிடம் இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் கூட 25 சதவீதத்திற்கு மேல் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவை மதித்து மக்கள் வாக்களித்துள்ளனர்
எனில் அதிமுக கூட்டணிக்கு இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றார்.
தேர்தல் ஆணையம் இது போன்ற தேர்தல்களை நடத்தக் கூடாது எனவும் இந்த தேர்தலில் நடைபெற்றதை எல்லாம் பார்த்துவிட்டு இனிவரும் தேர்தலிலாவது இது போன்ற தவறுகள் அடுத்த முறை நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பது தேர்தல் ஆணையத்தின் கடமை என கூறினார்.
அகில இந்திய அளவில் வடகிழக்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது, காங்கிரஸ் கட்சியோ அதனை சார்ந்த கூட்டணிகளோ மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறி படுதோல்வியை அடைந்துள்ளது என தெரிவித்த அவர் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிகள் வரும் நாட்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முழு நம்பிக்கையை பெற்று தேர்தல் முறையாக நடக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி முழுமையாக வெற்றி பெறக்கூடிய நிலையை நாங்கள்(தமாக) ஏற்படுத்துவோம் என தெரிவித்தார்.