அரசு ஆவணங்கள் அரசுக்கே திருப்பி அனுப்ப முடிவு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மகன் செல்வம் ஆகியோர் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டின் வடபுறமாக அம்புலி ஆற்றின் பிரதான வாய்க்காலான அன்னதானக் காவேரி வாய்க்கால் சென்று வருகிறது.
கடந்த ஆண்டு இந்த அனுனதானக் காவேரி வாய்க்கால் தூர்வாரப்பட்டு வெள்ள நீர் சென்ற நிலையில் அப்போது முதல் இரண்டு குடும்பத்தினரும் பாதை இன்றி சிரமப்பட்டு வந்தனர்.
இது தொடர்பாக தனது குடும்பத்தினருக்கு உடனடியாக பாதை ஏற்படுத்தித் தரக் கோரி பல முறை அரசு அதிகாரகளிடம் முறையிட்டும், போராட்டங்களில் ஈடுபட்டும் தனக்கு பாதை அமைத்து தராததால் மனதுடைந்து போன செல்வம் மற்றும் குடும்பத்தினர்,
இன்று கீரமங்கலம் அஞ்சல் நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சருக்கு தங்களது கோரிக்கைகளை எழுதி அத்தோடு தங்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள் மற்றும் குடும்ப அட்டைகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்க முயற்சி செய்தனர்.
இது தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்ற புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து வருவாய்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினரோடு சேர்ந்து
அன்னதானக் காவேரி வாய்க்காலின் தென்புறமாக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.இதனால் செல்வம் மற்றும் குடும்பத்தினர் தங்களது அரசு ஆவணங்களை திரும்பி அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுக்கோட்டை கோட்டாட்சியர், ஆலங்குடி வட்டாட்சியர், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர், கீரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர்,
கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் சேந்தன்குடியில் திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.