இரண்டாவது குருஸ்தலம் என அழைக்கப்படும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலமாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறது.
இந்தக் கோவில் பல நூற்றாச்டுகள் பழைமை வாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட திருக்கோவிலாகும், இந்தக் கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கோவிலின் குடமுழுக்கு விழாவிற்காக கடந்த சில நாட்களாக யாகசாலைப் பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்தக் கோவிலின் குடமுழுக்கிற்காக, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த சூழலில் இன்று காலை சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க, பல புண்ணிய நதிகளில் இருந்து சேமித்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் ஊற்றப்பட்டது.
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு பக்தி கோஷங்கள் முழங்க குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.
இந்தக் குடமுழுக்கின் காரணமாக ஆலங்குடி நகரே விழாக்கோலம் பூண்டு இருப்பதால் நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.