இனி சுவையை உணர வைக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி

விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) அனுபவத்தை மேலும் ருசிகரமாக்கும் வகையில், சுவையை உணரும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ‘இ-டேஸ்ட்’ (e-Taste) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி, சுவை உணர்வை (gustation) தூண்டுவதன் மூலம், டிஜிட்டல் உலகில் உணவுகளைச் சுவைப்பது போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
ஓஹியோ மாகாண பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், சென்சார்கள் மற்றும் வயர்லெஸ் ரசாயன விநியோகிப்பான் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு மற்றும் உமாமி (umami) ஆகிய 5 அடிப்படை சுவைகளைக் குறிக்கும் குளுக்கோஸ், குளுட்டமேட் போன்ற மூலக்கூறுகளை இந்த சென்சார்கள் அடையாளம் காண்கின்றன. அடையாளம் காணப்பட்ட மூலக் கூறுகளின் தரவுகள், மின்காந்த பம்ப் (electromagnetic pump) வழியாக வயர்லெஸ் கருவிக்கு அனுப்பப்படுகின்றன. இந்த பம்ப் ஒரு திரவ ரசாயனக் கலவையை அதிர்வுறுத்தி, ஜெல் அடுக்கு வழியாக பயனரின் வாயில் செலுத்துகிறது.
“இந்த ரசாயனக் கலவை ஜெல் அடுக்கில் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைப் பொறுத்து, சுவையின் தீவிரத்தையும், வலிமையையும் மாற்றி அமைக்கலாம்,” என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், ஓஹியோ மாநில பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஜிங்ஹுவா லி கூறினார். டிஜிட்டல் அறிவுறுத்தல்களின்படி, ஒரு சுவையை மட்டும் அல்லது பல சுவைகளை ஒரே நேரத்தில் வெளியிட்டு, வெவ்வேறு சுவை உணர்வுகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வு ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தக் கருவியின் தொலைதூரச் செயல்பாட்டைச் சோதிக்கும் சோதனையில், கலிஃபோர்னியாவில் இருந்து ஓஹியோவில் இருக்கும் ஒருவருக்கு வெற்றிகரமாக சுவை அனுபவத்தை ஏற்படுத்த முடிந்தது. மேலும், எலுமிச்சை ஜூஸ், கேக், ஆம்லெட், மீன் குழம்பு (அ) காபி போன்ற 5 வெவ்வேறு உணவுகளைக் கண்டறியும் சோதனைகளிலும் இது வெற்றி பெற்றுள்ளது.