Site icon Tamil News

அரசாங்க பங்குகளை தனியார் மயப்படுத்துவதன் நோக்கம் என்ன : விமல் கேள்வி!

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளையும் லங்கா வைத்தியசாலையின் அரச பங்குகளையும் விற்பதன் நோக்கம் என்ன என்பதை ஜனாதிபதி சபைக்கு அறிவிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) புதன்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றியதை தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்படி கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின்  நட்டமடையும்  அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக  ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது இலாபம் அடையும் நிறுவனங்களை ஏன் விற்க வேண்டும்? இவ்வாறான நிறுவனங்களை விற்கும் போது அதனை வெளிநாட்டவர் வாங்கினால் அவர்கள் இங்குள்ள பணத்தை டொலராக மாற்றியே கொண்டு செல்வார்கள்.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பதை மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.ஆனால் மறுசீரமைப்பு பட்டியலில் லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமாக அரசாங்க பங்குககள் மற்றும் லங்கா வைத்தியசாலைக்கு சொந்தமான அரச பங்குகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் அல்லது அந்த நிறுவனங்களில் உள்ள அரச பங்குகளை விற்பதன் நோக்கம் என்னவென்பதை ஜனாதிபதி குறிப்பிட வேண்டும் எனத்  தெரிவித்தார்.

 

Exit mobile version