ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதல் இரண்டு போட்டிகள் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த்ரே ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அந்த்ரே ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.